Friday, October 15, 2010
அசினினால் கண்பார்வை இழந்தோர் அசின்மீது குற்றசாட்டு
சிறிலங்க அரசோடு இணைந்த யாழ்ப்பாணத்தில் நடிகை அசின் நடத்திய கண் சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்ற பலர் கண் பார்வை இழந்துள்ளனர்.
இதற்குப் பொறுப்பேற்று நடிகை அசின் பதில் சொல்ல வேண்டும் என்று மே 17 இயக்கம் கோரியுள்ளது.
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு விழா (ஐஃபா), தமிழ்த் திரைப்பட உலகம், தமிழர் இயக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிர்ப்பால் படுதோல்வியில் முடிந்தது.
அதன் பிறகு இந்தி நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடித்த ‘ரெடி’ திரைப்பட படபிடிப்பிற்காக இலங்கை சென்ற நடிகை அசின், படபிடிப்பு முடிந்ததும் இலங்கை அரசின் விருந்தினராக தங்கியிருந்தார். அப்போது சிறிலங்க அதிபர் ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்சவின் உதவியுடன் தமிழர் பகுதிகளில் கண் சிகிச்சை முகாம் நடத்தச் சென்றார். யாழ்ப்பாணத்திலும், முல்லைத் தீவிலும் இந்த கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் கண் வெண்விழிப்படலத்திற்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மேலும் 10 ஆயிரம் பேருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்போவதாகவும் நடிகை அசின் கூறியிருந்தார்.
நடிகை அசின் முன்னிலையில் நடத்தப்பட்ட அந்த கண் சிகிச்சை முகாமில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பலருக்கு கண் பார்வை போய்விட்ட அதிர்ச்சி செய்து வந்துள்ளது. கண் பார்வை இழந்தவர்கள் மீண்டும் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றால், அரசு மருத்துவமனையில் ரூ.4,500 செலுத்த வேண்டும் என்றும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுதாக இருந்தால் ரூ.25,000 வரை செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையை இன்று செய்தியாளர்களிடம் விளக்கிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், சிறிலங்க அரசோடு இணைந்து நடிகை அசின் நடத்திய கண் அறுவை சிகிச்சை முகாம் அவர்களின் வாழ்வை அழித்துவிட்டது என்று குற்றம் சாற்றினார்.
போரினால் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ள மக்களை, மனிதாபிமான போர்வையில் நடத்தப்பட்ட கண் சிகிச்சை முகாமினால் நடிகை அசின் அவர்களை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளார் என்றும், இதற்காக அவர் ஈழத் தமிழர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.
அசின் நடத்திய கண் சிகிச்சை முகாம் இங்குள்ள நடிகர்கள் சிலருக்கு ஒரு கண் திறப்பாக இருக்கட்டும் என்று கூறிய திருமுருகன், இதற்குப் பிறகாவது சிறிலங்க அரசின் இப்படிப்பட்ட சூழ்ச்சிகளில் தமிழ்த் திரைப்பட நடிகர்களும், நடிகைகளும் சிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
திருமுருகனுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய இதழாளர் கா.அய்யநாதன், சிறிலங்க அரசிற்கு உண்மையிலேயே தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்துக் கொண்டிருக்கும் ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் அயல் நாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதை ஏன் சிறிலங்க அதிபரின் இளைய சகோதரர் பசில் ராஜபக்ச தடுத்து வருகிறார் என்று கேள்வி எழுப்பினார்.
வன்னி முகாமில் இருந்து தங்கள் வாழ்விடங்களுக்கு மீள் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு ரூ.25,000 நிவாரண உதவி அளித்தது சர்வதேச இடம்பெயர்வோர் அமைப்புதான் (International immigration organization) என்றும், இன்றுவரை சிறிலங்க அரசு அவர்களுக்கு எந்த உதவியையும் செய்யவில்லை என்றும் கூறிய அய்யநாதன், பிழைக்க வழியின்றி, கண்ணி வெடிகளை அகற்றுதல் போன்ற மிக ஆபத்தான வேலைகளில் தமிழ்ப் பெண்கள் ஈடுபட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.
தமிழ்த் திரைப்பட உலகின் எதிர்ப்பை மீறி ஐஃபா விழாவில் கலந்து கொண்ட இந்தி நடிகர் நடித்துள்ள ரத்த சரித்திரம், அசின் நடித்து வெளிவரும் திரைப்படங்களை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று ஜனநாயக வழியில் இயக்கம் நடத்துவோம் என்று அவர்கள் கூறினர்.